மீண்டும் தொடங்கிய 100 நாட்கள் வேலைத் திட்டம்

மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைக் கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் பணி வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் 224 கிராம ஊராட்சிகளில் தற்போது 100 நாள் வேலை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பவானிசாகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சியில் நேற்று 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உத்தண்டியூர் பகுதியில் உள்ள ஓடையை ஆழம் மற்றும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்குச் சென்று கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவிக்கொண்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின் தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஓடையை அகலம் மற்றும் ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தொற்று பரவல் காரணமாக 50 வயதிற்கு அதிகமானவர்களுக்கு 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்குவதில்லை. பல கிராமங்களில் 50 வயதை மேற்பட்டவர்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருவதால் வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.