இது தெரிஞ்சா போதும் உங்களுக்கு வேலை ரெடி!

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைகளில் திறன் மிக்கவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பெரிய நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன. இந்தக் கொரோனா காலகட்டத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால் இந்தத் துறையில் பணிபுரிவதற்கு திறன் மிக்கவர்கள் இல்லாது இருப்பது பெரிய நிறுவனங்களை கவலையடையச் செய்துள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைகள் அனைத்தும் இந்த தொற்றுநோய் காலத்திலும் விரைவாக வளர்ந்து வருகிறது. ஆனால், இங்கிலாந்து போன்ற நாடுகளில் டிஜிட்டல் திறன் மிக்க பணியாளர்களின் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறுகிறது ஒரு தரவு. இந்தியாவில் தற்போது 12 சதவீதம் மட்டுமே டிஜிட்டல் திறன் மிக்க பணியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை, பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. இதை காரணமாக முன்னிறுத்தி, நாட்டில் டிஜிட்டல் திறன் மிக்க தொழிலாளர்கள் தேவையானது 2025-ம் ஆண்டுக்குள் ஒன்பது மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஒரு புதிய சர்வே அறிக்கை சொல்கிறது.
மார்க் ரைட் என்பவர் க்ளைம்ப் ஆன்லைன் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது, “தேவையான டிஜிட்டல் திறன்களைக் கொண்டவர்கள் போதுமானதாக இல்லை. இது மிகவும் கவலை அளிக்கிறது. பேஸ்புக், கூகுள் போன்றவற்றில் விளம்பர ஒளிபரப்பு கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இதற்கும் ஒரு பெரிய திறன் பற்றாக்குறை உள்ளது” என்று கூறியுள்ளார். இவரின் நிறுவனத்தில் 14 காலியிடங்கள் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் அதற்கு ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.