நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-51; கவுண்ட்டவுன் தொடங்கியது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின், 2021ம் ஆண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி. சி-51 நாளை விண்ணில் பாய்கிறது. 19 செயற்கை கோள்களுடன் விண்ணுக்கு செல்லவுள்ள ராக்கெட்டின் கவுன்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது, விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 78-வது ராக்கெட்டாகும். அதேபோல சதிஷ்தவான் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39-வது ராக்கெட்டாகும்.
இந்த செயற்கை கோளுடன் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா-1 என்ற செயற்கைகோள் முதன்மை செயற்கைகோளாக செல்கிறது. அதனுடன் இந்திய நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் தொகுப்பைச் சார்ந்த 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஷ்தவான் சாட், இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உள்ளிட்ட 19 செயற்கைகோள்கள் ஏவப்படுகின்றன.
இவற்றில் முதன்மை செயற்கைகோள், பூமியில் இருந்து 637 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தற்போது செலுத்தப்படும் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் சேர்த்து இதுவரை 34 நாடுகளைச் சேர்ந்த 342 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு திட்டமிட்டபடி தொடஙகியது. நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைகோள்களின் செயல்பாடுகளையும் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கவுண்ட்டவுனை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் தீப்பிழம்பை கக்கியப்படி செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.