திருச்செந்தூர் முருகன் கோவிலில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கோட்டைத்தெருவை சேர்ந்த ஜோதிபாசு (55). அங்குள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவர்கள் இன்று குடும்பத்தினருடன் பகலில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
அனைவரும் கடலில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு புறப்பட்டனர். அப்போது ஜோதிபாசு மற்றும் அவரது 2-வது மகன் பிரசாந்த்(22) ஆகியோர் கோவில் முன்பு உள்ள புறக்காவல் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பிரசாத் திடீரென்று கிழே விழுந்து மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளார்.
அதைப்பார்த்த தந்தை ஜோதிபாசு தனது பையனை மின்சாரம் தாக்கியதாக கூறி எழுப்பி பார்த்த போது அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் கோவில் முதலுதவி மையத்திற்கு கொண்டு சென்று அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரசாத்தை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரசாந்த் இறந்து விட்டதாக கூறினர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் கோவிலுக்கு வந்த இடத்தில் எங்கள் பிள்ளை உயிரிழந்து விட்டாரே என கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடத்திற்கு கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ஜோதிபாசு கொடுத்த புகாரில் தனது மகன் பிரசாந்துடன் கோவில் புறக்காவல் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்ததாகவும், தனது மகனை எழுப்பிய போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகவும், இதையடுத்து தன்னை அங்கிருந்த யாரோ கட்டையால் தட்டி விட்டு காப்பாற்றினர் என்றும்,
எனவே தனது மகன் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளார் என ஜோதிபாசு கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றனர். இதையடுத்து பிரசாந்த் உடல் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. இரவு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.