அத்திக்கடவு திட்டம் தேர்தலுக்குள் செயல்பாட்டுக்கு வரும்; எம்.பி ஆ.ராஜா அதிரடி

கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் நீலகிரி எம்பி ராஜா இன்று சுற்றுப்பயணம் செய்தார். அன்னூர் தெற்கு ஒன்றியத்தில், கணேசபுரத்தில் கட்சி அலுவலக திறப்பு விழா மற்றும் இலவச சேவை மையத் திறப்பு விழா நடந்தது. நீலகிரி எம்.பி-யும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா ரிப்பன் வெட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், அபிநயா, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், பேரூராட்சித் தலைவரும், அன்னூர் நகரச் செயலாளர் பரமேஸ்வரன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அம்பாள் நந்தகுமார், ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதை அடுத்து குரும்பபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 200 பெண்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலை மற்றும் தல ஐந்து கிலோ அரிசி வழங்கப்பட்டது. 

நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆ. ராசா பேசுகையில்  உலகிலேயே ஐந்து முறை முதலமைச்சராகவும், 60 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாகவும், 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவருமாக பதவி வகித்தவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய நூற்றாண்டு விழா இங்கிலாந்து நாட்டில் லண்டனில் பல இடங்களில் கருத்தரங்கமாக நடைபெற்றது. கனடா, அமெரிக்கா என உலகின் பல நாடுகளில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. அனைத்து சமுதாயத்தினரும் வாழும் சமத்துவபுரம் அமைத்தவர். கைரிக்சாவை ஒழித்து, சைக்கிள் ரிக்சாவை அறிமுகப்படுத்தியவர். 

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி கிடைக்க செய்தவர். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியவர். மாடு மேய்த்துக் கொண்டிருந்த என்னை போன்றவர்கள், 25 ஆண்டுகள் தற்போது டெல்லியில் ஆங்கிலம் பேசி எம்.பி ஆக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர்கள். அண்ணா, பெரியார், அம்பேத்கர் வழியில் வந்தவர் கலைஞர். தற்போது மதவாதம் பேசி, ஜாதி அரசியல் பேசி நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி வருகிறது பிரதமர் மோடியின் அரசு. 18 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு ஒன்றிய அரசு முப்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. 

ஒவ்வொருவரும் தங்களது குலத் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என அவர்களுடைய மூளையை மழுங்கடிக்க செய்யும் திட்டம் குஜராத்தில், மணிப்பூரில் பல இடங்களில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்படுகின்றனர். கற்பழிக்கப்படுகின்றனர். இதை பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ, மணிப்பூர் மாநில முதல்வரோ கண்டு கொள்ளவில்லை. திமுக – வுக்கு ஓட்டு போடுங்கள், உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் மதவாத கட்சியான பிஜேபிக்கு எதிராக வாக்களியுங்கள். இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். 

மோடி, அமித்ஷா இருவரும் விஷப் பாம்புகள். ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிக்க பிஜேபிக்கு எதிராக அணி திரள வேண்டும் என்றார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் தேர்தலுக்கு முன்பாக அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வரும். தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. முடிந்தவுடன் செயல்பாட்டுக்கு வரும். மேற்கு புறவழிச்சாலைக் காண பணிகள் நடந்து வருகிறது. வருகிற பட்ஜெட்டில் இந்த நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்றார். 

இதை அடுத்து அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட 27 ஏக்கர் பரப்பளவு உள்ள குரும்பபாளையம் குளத்தை ஆய்வு செய்தார். அங்கே திமுக விவசாய அணி நிர்வாகிகள் இந்த குளத்தை அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுகிறேன் என ராசா உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பச்சாபாளையம் ஊராட்சிகளில் கான்கிரீட் சாலைக்கு அடிக்கல் நாட்டும் நாட்டினார். 

27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மோளபாளையத்தில் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இத்துடன் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுற்றுச்சுவர் மற்றும் காங்கிரிட் சாலையையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *