கூட்டுறவு சங்க பதவிக்காக ’ஆவின் பாலில் கலப்படம்’ என அவப்பெயர் ஏற்படுத்தும் ஊழியர்கள்

“பாலில் கலப்படம்” எனக்கூறி ஆவின் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த சில ஊழியர்கள் முயற்சி..? கூட்டுறவு சங்க செயலாளர் பதவியை பிடிக்க பாலில் கலப்படம் என திட்டமிட்டு அவதூறு பரப்பிய ஊழியர்கள்

பால் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே  கூட்டுறவு சங்க செயலாளர் பதவிக்கு குறி வைத்து ஆவின் பாலில் கலப்படம் செய்வதாக கூறி திருப்பூர் ஆவின் நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுத்த சில  ஊழியர்கள் சதி செய்து வருவதாக பால் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நத்தக்காடையூரில்  ஆவின் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நாள் ஒன்றிற்கு 2600 லிட்டர் வரை பால் பெறப்படுகிறது. பின் பல கட்ட ஆய்வுக்கு பின்னர் திருப்பூர் ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பபடுகிறது.

இந்நிலையில் இங்கு கொள்முதல் செய்யப்படும் பாலில் கலப்படம் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் ஆவின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினர் நேற்று முன் தினம் 3 மணி நேரத்திற்கும் மேலாக பல கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் முற்றிலும் பொய் எனவும், பாலில் கலப்படம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து சென்றனர்.

இந்நிலையில் ஆவின் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நத்தக்காடையூர் ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு இடையே நடக்கும்  அதிகார கோஷ்டி பிரச்சனையால் ஒரு தரப்பினர் திட்டமிட்டு கல் உப்பு சாக்கு, மற்றும் தண்ணீர் கலப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி, திருப்பூர் ஆவின் நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுத்த சதி வேலையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூறுகையில், நத்தக்காடையூர் ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பாலில் கலப்படம் நடப்பதாக பரவிய தகவல் முற்றிலும் பொய் எனவும்,  செயலாளர் பதவிக்கு வர வேண்டும் என்ற அதிகார போட்டியில் இதே சங்கத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் சிலர் சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும்,

ஆவின் நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அவர்களாகவே பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஆவின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளே பல முறை ஆய்வு மேற்கொண்டும் பாலில் கலப்படம் ஏதும் இல்லை என தெரிவித்த பின் 

திட்டமிட்டு அவதூறு பரப்பும் ஊழியர்கள் மீது ஆவின் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *