ஆளுநர் வருகை: போலீசாருடன் பிரச்சனை செய்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு

பழனி கோயிலுக்கு வந்த ஆளுநரை வரவேற்று போலீசாருடன் பிரச்சனை செய்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ரவி அவர்கள் குடும்பத்துடன் வருகை தந்தார். ஆளுநருக்கு வரவேற்பு அளிப்பதாக தேசிய கொடியுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் பேருந்து நிலையத்தின் முன்பு கூடிய போது போலீசார் உடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளாக மாறியது. 

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரத்திற்கு பின்னர்  ஆளுநருக்கு வரவேற்பு அளிக்க அனுமதி அளித்து விடுவித்தனர். போலீசாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், நகர தலைவர் ராமசந்திரன்,  இளைஞர் அணி நிர்வாகி ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் முத்து உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள்  பழனி பேருந்து நிலையம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சசச்சிதானம், நகரச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜமாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருவளவன், நகர செயலாளர் மணவாளன் உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அனுமதி இன்றி ஒன்றுகூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆளுநர் வருகைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவித்த இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *