இடையூராக உள்ள சுங்கசாவடியை அகற்ற சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழு பரிந்துரை..!

கிருஷ்ணகிரியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சுங்கசாவடியை அகற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழு பரிந்துரை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டது பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் உறுப்பினர்களான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், திமுகவின் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், போளூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கிருஷ்ணகிரி அணை, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, தென்பெண்ணையாற்று கால்வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் பேரவை குழு உறுப்பினர்கள் அடங்கிய அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை மத்திய மாநில கணக்காயர்கள் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் 2021 க்கு முன்பு உள்ள வழக்குகளை விசாரிக்கின்றோம். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற பேரவை பொதுக்குழு உறுப்பினர்கள் புகார்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்கள். அதன்படி கிருஷ்ணகிரி நீதிமன்றம் சரியான முறையில் புனரமைக்கவில்லை என்ற புகார் இருந்தது தற்பொழுது அது சரி செய்யப்பட்டு விட்டதாக நீதிபதியின் பதிவாளர் தற்பொழுது தெரிவித்துள்ளார், அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் நினைவு திட்டத்தில் சேர வேண்டிய உரிமையை முறையாக சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது அதைக் கேள்வியாக எழுப்பி உள்ளோம் என்றார்.

தொடர்ந்து அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த குழுவின் தலைவர் ஏழை எளிய மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என கூற முடியாது அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களுக்கு அரசு இடம் அளிக்க வேண்டும். 10 ஏக்கருக்கு மேல் இடம் வைத்திருந்தால்தான் ஆக்கிரமிப்பு என்று சொல்ல வேண்டும் அதனால் ஏழை எளிய மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது தவறான வார்த்தை என்றார். 

மேலும் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் குறிப்பாக மகளிர் பள்ளிகளில் நாப்கின் சானிடைசேஷன் எரிப்பு மிஷின்கள் வைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் சுங்கச்சாவடிக்கு அடுத்து உள்ளது. 

இந்த சுங்கச்சாவடியால் மருத்துவமனைக்கு வரக்கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தில் இருந்து 1500 ஆக குறைந்துள்ளது ஆகவே இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது ஆட்சியர் அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்கு அப்பால் மாற்ற வேண்டும் அதுவரை கிருஷ்ணகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை கட்டணம் இல்லாமல் அனுமதிக்க வேண்டுமென இந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு பரிந்துரை செய்கிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *