வாய் பேச முடியாத குழந்தையால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்

சேலத்தில் வாய் பேச முடியாத தங்கள் குழந்தையின் நிலையைக் கண்டு மன வேதனையடைந்த  ஐடி நிறுவன பொறியாளர், மனைவி, குழந்தை, தந்தை ஆகியோருக்கு விஷம் கொடுத்து   கொலை செய்து விட்டு,  தானும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்,  கன்னங்குறிச்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (80). இவர் பெங்களூர் விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றப் பின்  சேலத்தில் வசித்து வந்தார்.  இவரது மனைவி வசந்தம் (56). இவர்களது இரண்டாவது மகன் திலக் சென்னையில் உள்ள தனியார் ஐடி  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (38).  இவர்களுக்கு ஆறு  வயதில்  மகன் உள்ளார். 

அக்குழந்தை ஆறு வயது ஆகியும் வாய் பேச முடியாமல் தவித்து வந்தது. கொரோனா காலத்தில் இருந்து வீட்டில் இருந்தே வேலை பார்த்து வரும் திலக், வாய் பேச முடியாத தனது 6 வயது மகன் சாய் கிரிசாந்த்தை நினைத்து நினைத்து  மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல துரு துருவென விளையாடும் குழந்தை,  வாய் பேச முடியாமல் தவிக்கிறதே என குடும்பத்தினர் அனைவரும் மன வேதனையில் இருந்தனர். 

மருத்துவரிடம் காண்பித்தும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு திலக் தனது வீட்டில் இருந்த தாய், தந்தை, மனைவி மற்றும் ஆறு வயது குழந்தை சாய் கிரிசாந்த்  ஆகிய 4 பேருக்கும் உணவில் விஷம் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று திலக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திலக்கின் தாய் வசந்தம் , சற்று மயக்க நிலையில் காலை 6 மணி அளவில்  எழுந்து பார்த்த போது , கணவன் , மருமகள் மற்றும் குழந்தை ஆகியோர் வாயில் நுரை தள்ளியப்படி  இறந்து கிடந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்து,  வீட்டின் கதவை திறந்து அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். 

அப்போது அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது, வீட்டில் பெரியவர் சிவராமன், மருமகள்  மகேஸ்வரி மற்றும் சாய் கிரிசாந்த் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேல் மாடிக்கு சென்றபோது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அதிர்ச்சியடைந்து , 

இது குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். பின்னர்  சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர்,  சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிர் பிழைத்த மூதாட்டி வசந்தத்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

குழந்தை வாய் பேச முடியாத ஊமை ஆகிவிட்டதே என்ற வருத்தத்தில் ஒரு  குடும்பமே  உயிரிழந்த  சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *