தேடப்படும் குற்றவாளிகளிடமிருந்து ஐம்பொன் சிலைகள் மீட்பு…! 3 பேர் கைது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளிடமிருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு. இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது. மீட்கப்பட்ட சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  தெ.கள்ளிப்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீட்டிலும் பணம் மற்றும் வீட்டில் வைத்திருந்த முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் யார் என்பதை  காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எனவே தீவிர விசாரணை மற்றும் கொள்ளை நடந்த வீடுகளில் கிடைக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட தடயங்களை கொண்டு ஆய்வு செய்ததில், பெரியகுளம் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட கும்பல் என தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அவர்களை தேடிய நிலையில், நேற்று இரவு பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த மதுசூதனன் மற்றும் அவருடன் இருந்த இரண்டு சிறுவர்கள் என மூவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளை அடித்த வள்ளி, தெய்வானை, முருகன் ஆகிய மூன்று சிலைகளை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மதுசூதனன் (22) என்ற இளைஞரை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் சிறையில் அடைத்தனர். 

மேலும் இரண்டு சிறுவர்களை சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய இரண்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய மூன்று சிலைகள் ஐம்பொன் சிலைகளா என்றும், வேறு ஏதும் கோவில்களில் இருந்து கொள்ளையடித்து விற்கப்பட்ட சிலைகளா என ஆய்வுக்கு உட்படுத்தி அதன் உண்மை தன்மை தெரிந்த  பின்னரே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *