அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி…!

தேனியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணியாளர் கைது.‌ மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு அருகேயுள்ள பவளம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (50). விவசாயியான இவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மூலம் மேக்கிழார்பட்டியை சேர்ந்த இருளன் (43) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது.‌ அந்த கால கட்டத்தில் பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி – அல்லிநகரம் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எலக்ட்ரீசனாக பணிபுரிந்து வந்த இருளன், 

தனக்கு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள்  நன்கு தெரியும் என்றும், அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக துரைப்பாண்டியனிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து அப்பிப்பட்டி ஜெயக்குமார் மற்றும் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த தவமணி ஆகியோரும் அதையே கூறியுள்ளனர்.‌

அதனை உண்மை என நம்பிய துரைப்பாண்டியன் தனது சகோதரர் மற்றும் உறவினர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலைக்காக பணம் ரூபாய் 87லட்சத்து 15ஆயிரம் இருளனிடம் வழங்கியுள்ளார்.‌ ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட இருளன் பேசிய படி அரசு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததோடு பணத்தை திரும்ப தர மறுத்து காலதாமதம் செய்துள்ளார். 

இதனிடையே தேனி மாவட்டத்தில்  இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு கடந்தாண்டு இருளன் பணியிடை மாறுதலாகி சென்று விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட துரைப்பாண்டியன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில், இருளன் , ஜெயக்குமார் மற்றும் தவமணி ஆகிய 3பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.‌

இதனிடையே துரைப்பாண்டியனைப் போல் தங்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 26லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்ததாக இருளன் மீது மேலும் பலர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.‌ 

அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்ட இருளன்,  அதற்காக உறுதிமொழி பத்திரமும் எழுதிக் கொடுத்து கையொப்பமிட்டுள்ளார்.‌ அதனடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், துரைப்பாண்டியன் மற்றும் பலரிடம் என 1கோடியே 15லட்சம் ரூபாய் வரையில் இருளன் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.‌

இதையடுத்து தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்த இருளனை இன்று கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஜெயக்குமார், தவமணி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *