ஆக்கிரமிப்புகள் அகற்ற அலட்சியமாக பட்டா வீட்டை இடித்த வட்டாட்சியர்…!

ரிஷிவந்தியத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது பட்டாவில் உள்ள வீட்டையும் அலட்சியமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் இடித்த வட்டாட்சியரை கண்டித்து கிராம மக்களும், வட்டாட்சியருக்கு ஆதரவாக வருவாய்த் துறையினரும் மாவட்ட ஆட்சியரகத்தில் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பட்டா இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து தள்ளிய ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய கோரியும் 

வீடுகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையை மறித்து தனி வட்டாட்சியரின் அதிகார போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனி வட்டாட்சியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நிரந்தரமாக பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளாமல் தற்காலிக பணி நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு உரிய விசாரணை மேற்கொள்ளாமல் தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை கண்டித்தும்  மாவட்ட ஆட்சியரை திரும்ப பெற வலியுறுத்தியும்,

வருவாய் அலுவலர்களை சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனி வட்டாட்சியரை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்களும், தனி வட்டாட்சியரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பிலும் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது 

தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நீடித்ததால் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி உள்ளதாகவும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை முடித்துக் கொண்டு வருவாய் துறை அலுவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *