#வைரல்: மாநகராட்சி பள்ளிக்கு 2 கோடி நிதி அளித்த 86 வயது வியாபாரி. 

மதுரை தத்தனரி பகுதியில் அப்பளம், வற்றல் வியாபாரம் செய்து வரும் ராஜேந்திரன் என்ற 86 வயது முதியவர், கடந்த 2018ல் மாநகராட்சி திரு.வி.க.பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள், இறைவணக்க கூடம் உள்ளிட்டவைகளை ரூ.1கோடியே 10 கோடி ரூபாய் நிதியில் கட்டிக்கொடுத்துள்ளார். அண்மையில் செல்லூர்  கைலாசபுரம் மாநகராட்சி பள்ளியில் ரூ.71.45 லட்சம் செலவில் 4 வகுப்பறைகள், கழிப்பறை, உணவுக்கூடம் ஆகியவற்றை கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் திரு.வி.கபள்ளிக்கு புதிய சத்துணவு கூடம் கட்டுவதற்கும் பணம் வழங்கியிருக்கிறார்.

86 வயதில் தொடர்ந்து கல்விக்காக சேவை செய்து வரும் இந்த முதியவர் தற்பொழுது அனைவரின்  கவனத்தை ஈர்த்து வருகிறது இன்றும் சிறு இளைஞனைப் போல் துடிதுடிப்புடன் காய்கறி வற்றல் தொழிலை மேற்பார்வை செய்வதும் தொழிலாளர் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் கடமையாக கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.

விருதுநகர் சேர்ந்த ராஜேந்திரன்(86) 5-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். அதற்கு மேல் படிப்பதற்கு ஆசை இருந்தும் அவரது வீட்டில் அவரை படிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை விருதுநகரில் பூண்டு கடையில் மாதம் 25 ரூபாய்க்கு வேலை பார்த்தார்.  1951-ம் ஆண்டில் 300 ரூபாயுடன் மதுரைக்கு வந்தவர். முதலில் அரிசி, காய்கறி வியாபாரம் பின்னர்  அப்பளம், வடகம், மோர் மிளகாய் வியாபாரம் உருவாக்கி இருக்கிறார்.

மதுரை  மாநகராட்சி பள்ளிக்கு நிதி வழங்கியது பற்றி பேசிய ராஜேந்திரன், மதுரை மண் ,மக்கள் தன்னை வளர்த்து எடுத்தது குறிப்பாக தத்தனேரி செல்லூர் பகுதிகளில் உள்ள மக்கள் தன்னை வியாபாரத்தில் தொழில் முனைவராக உருவாக்கி இருக்கிறார்கள்.இளமை காலத்தில் படிக்க இயலாமல் போனதை பற்றி பல காலங்களில் வருத்தப்பட்டது உண்டு.  இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநகராட்சி பள்ளிகளுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார். 

இளமைக் காலத்தில் தான் பட்ட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட ராஜேந்திரன் இன்னும் தொடர்ந்து கல்விக்காக சேவை செய்ய காத்திருப்பதாக குறிப்பிட்டார். முதியவர் ராஜேந்திரன் சேவை அறிந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இன்று அப்பள கம்பெனிக்கு நேரில் வந்து ராஜேந்திரனை கட்டித்தழுவி, பொன்னாடை போர்த்தி, திருக்குறள் நூல் அளித்து பாராட்டு தெரிவித்தார்.

சாலமன் பாப்பையா கூறுகையில், “அண்மையில் நான் பயின்ற மாநகராட்சி பள்ளிக்கு நானும் ரூ.20 லட்சம் நிதி அளித்தேன். என்னைப் பொறுத்தவரை நான் அந்தப்பள்ளியில் படித்தேன், அதனால் கொடுத்தேன். ஆனால், ராஜேந்திரன் வெறும் 5ம் வகுப்பு மட்டும் படித்து விட்டு இவ்வளவு நிதியை பள்ளிகளுக்கு கொடுத்துள்ளார். அது போற்றத்தக்க செயல் என நினைத்தேன். இன்று நேரில் வந்து அவரை வாழ்த்தினேன். எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

 வருங்கால சந்ததியினரை மனதில் கொண்டு தான் சம்பாதித்த சொத்து அனைத்தையும் பள்ளிக்காக செலவழித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார் முதியவர் ராஜேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *