குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா… விடிய விடிய கறி விருந்து அன்னதானம்!

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ளது முத்தழகுபட்டி கிராமம். இங்கு 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த வருட திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது.   திருவிழா நாளை 2ம் தேதி பகல் சாப்பரத்துடன் நிறைவடைய உள்ளது.

திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று  01.08.22 முக்கிய நிகழ்வான அன்னதான நிகழ்ச்சி மாலை துவங்கி விடிய விடிய அதிகாலை வரை நடைபெறும்.  முன்னதாக செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிறைவேற்றி தந்ததை அடுத்து  அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களால் முடிந்த காணிக்கையாக அரிசி, பருப்பு, ஆடு, கோழி, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், போன்ற காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள்,  ஆகியவற்றை செலுத்துகின்றனர். 

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் தம்பதியினர் அவர்களுக்கு  குழந்தை பிறந்தவுடன்  திருவிழாவின் பொழுது அந்தக் குழந்தையை கோவில் ஒப்படைத்து விடுவார்கள். பின்னர் அந்த குழந்தையை நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவார்கள்.  அதில் கலந்து கொள்பவர்கள் குழந்தை ஏலம் எடுத்து அதற்கான தொகையை கோவிலில் செலுத்துவார்கள். 

பின்னர் ஏலம் எடுத்தவரிடம் இருந்து குழந்தையின் தாய் தந்தையர் ஏலத் தொகையை  கொடுத்து வாங்கி கொள்வார்கள். செபஸ்தியாருக்கு பொதுமக்கள் காணிக்கையாக வழங்கக்கூடிய ஆடு, கோழி, காய்கறிகள் பலசரக்கு சாமான்கள் ஆகியவற்றை கொண்டு சுமார் ஒரு லட்சம் பேருக்கு அசைவ உணவு அன்னதானம் மாலை துவங்கி விடிய விடிய அதிகாலை வரை சிறப்பாக  நடைபெறும். இதில்  முத்தலகுபட்டியில் உள்ள இளைஞர்கள், பெண்கள், ஆண்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரி மற்றும்  வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து அன்னதானத்திற்காக காய்கறிகளை நறுக்குவது  சமையல் செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளில் ஈடுபடுகின்றனர். 

சமைப்பதற்காக சமையல் மாஸ்டர்களை வைத்துக் கொள்வது கிடையாது. ஊர் மக்களே ஒன்று சேர்ந்து சமைக்கின்றனர். கோயில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அடுப்புகள் அமைக்கப்பட்டு முத்தழகுபட்டியை சேர்ந்த இளைஞர்கள் பெரிய அளவிலான அண்டாவில் சாதம் மற்றும் கறி குழம்பு தயாரிக்கும் பணியில் காலையிலிருந்தே ஈடுபடுகின்றனர். சமைக்கப்பட்ட சாதம் கோவில் வளாகத்தில் உள்ள கூடத்தில்  மலைபோல் குவிக்கப்பட்டு உள்ளது.  அதேபோல் தயார் செய்யப்பட்ட கறிக்குழம்புகளை  பெரிய பெரிய டிரம்களில் நிரப்பி வைக்கின்றனர்.

இந்தக் கறி விருந்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு கோழி என 3000 கிலோ கறி மற்றும் 100 மூட்டை அரிசி சாதம் தயார் செய்யப்படுகிறது.  இதனையடுத்து  மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் பக்தர்களுக்கு விடிய விடிய கறி விருந்து அன்னதானம் நடைபெறும். கோவில் திருவிழாவில் பங்கேற்க சென்னை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி என வெளியூர்களிலிருந்து   இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள் திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *