ஊட்டியில் பழங்குடியினர் கொட்டும் மழையிலும் வனத்துறையின் மீது ஆட்சியரிடம் புகார் 

Ooty

உதகை அருகே மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் பழுமையான குடி நீர் தொட்டிகளை இடித்து புதிய தொட்டிகளை கட்டவும், நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் வனத்துறை தடைவிதித்து வருவதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் தாழ்த்தபட்ட பெண்கள் கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து புகார் அளித்தனர்.

உதகை அருகே உள்ள மசினகுடி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மாவனல்லா, வாழைத்தோட்டம் செம்ம நத்தம் கிராம பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானை வழித்தடம் என்று கூறி வனத்துறையினர் அடிப்படை வசதிகளை செய்ய தடை விதித்து வருகின்றனர். இதனால் இந்த கிராமங்களை சார்ந்த பழங்குடியினர், தாழ்த்தபட்டோர் உள்பட 1000 க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வாழைத்தோட்டம் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிதாக குடிநீர் தொட்டி கட்டவும் நடைபாதை அமைக்கவும் சுமார் 20 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.

 அதே போல மாவனல்லா பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமத்தை சுற்றி நடைபெற்று வந்த அகழி எடுக்கும் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என முதுமலை புலிகள் காப்பகத்தின் சிங்கார வனத்துறையினர் தடுத்து நிறுத்து உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக வனத்துறையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைவருக்கு புகார் அளிக்கப்பட்டதன் பேரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் கிராமத்திற்கு சென்ற நேரில் ஆய்வு செய்த அம்ரித் குடிநீர் தொட்டி கட்டவும், நடைபாதை அமைக்கும் பணியையும் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

 அதனையடுத்து குடிநீர் தொட்டி கட்டுவதற்காக பணிகள் தொடங்கிய போது அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட சிங்கார வனத்துறையினர் பணியை தடுத்து நிறுத்தியத்தினர்.  இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டதுடன்  மசினகுடி –  உதகை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த நிலையில் வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம் ஆகிய 3 கிராமங்களை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்திக்க உதகைக்கு வந்தனர். பின்னர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித்தை நேரில் சந்தித்து வனத்துறையினரின் அத்துமீறல் குறித்து தெரிவித்தனர். அவற்றை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பணிகளை தொடர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

பல தலைமுறையாக வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பாக அடிப்படை வசதிகள் தொடர்ந்து செய்து கொடுத்து வரும் நிலையில் சமீப காலமாக வனத்துறையினர் அவற்றை செய்ய விடாமல் தடுத்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *