கோவையில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்கள் – அதிரடி காட்டிய கோவை மாநகர போலீஸ் 

அமைதி பூங்காவான கோவையில் பெரும்பாலும் வெளிப்படையான ரவுடிசம், கட்ட பஞ்சாயத்துகளை காண்பது அறிது. சில ஆதாய கொலை, கோஷ்டி மோதல்கள், போன்ற குற்றச்சம்பவங்கள் இருந்தாலும், நேரடியான ரவுடிசம் காண முடியாது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா, போதை மாத்திரை விற்பனையும் அதனால் ஏற்படும் தகராறில்  கொலைகள், அடிதடி சம்பவங்கள் நடந்தது. இதையடுத்து  மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கை தீவிரமானது. 

இந்த நிலையில் கோவை மாநகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திரையரங்கம் விற்பனை தொடர்பாக இரண்டு ரவுடி கும்பல் மோதிக்கொண்டனர். அப்போது இந்த வழக்கு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பட்டா கத்திகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.  தொடர்ச்சியாக ஆவாரம்பாளையம் பகுதியில் பட்டப்பகலில் சத்தியபாண்டி என்ற நபர் ரவுடிகளால் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவம் நடந்த மறுநாளே கோவை நீதிமன்ற வளாகம் அருகே முன் பகை காரணமாக ரவுடி கும்பல் ஒன்று கோகுல் என்பவரை வெட்டி கொலை செய்தது. அடுத்தடுத்த இரண்டு சம்பவங்கள் மூலம் ரவுடிகளின் வெளிப்படையான ஆட்டத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர். முதல் கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராமில்  மோதிக் கொள்ளும் ரவுடி கும்பல் பட்டப் பகலில் இந்த கொலைகளை அரங்கேற்றியது தெரியவந்தது.  உடனடியாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பழைய ரவுடிகளின் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களில் யார், யார்? கண்காணிப்பில் உள்ளனர். 

பின்னணிகள் குறித்து விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதனிடையே இந்த இரண்டு கொலை வழக்குகளில் இறந்த நபர்களின் பின்னணியை வைத்து சத்தியபாண்டியை கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மூளையாக செயல்பட்ட நபரை தேடி வந்தனர். இதே போல் இன்ஸ்டாகிராம் கோஷ்டி மோதலால் கொலை செய்த கும்பலை தனிப்படை போலீசார் நீலகிரியில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்களை கோவைக்கு அழைத்து வந்தபோது தப்ப முயன்ற மூன்று பேரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

சற்றும் எதிர்பார்க்காத கோவை ரவுடிசத்தை கட்டுபடுத்த மாநகர போலீஸ் சார்பில் ( DRIVE AGAINST ROWDYIM ) என்ற பெயரில் தனிப்படை அமைத்து இன்ஸ்டாகிராம் ரவுடி கும்பல் மற்றும் புதிதாக உருவாகியுள்ள ரவுடி கும்பல்களின் தகவல்களை சேகரிக்க துவங்கினர். அந்த அடிப்படையில் இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்திகளுடன் வீடியோ வெளியிடும் நபர் மற்றும் அவர்களது விவரங்களை சேகரித்த போலீசார் தமன்னா என்ற பெண் உட்பட பலரையும் கைது செய்தனர். 

மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவையில் உள்ள பிரபல கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஆரம்பத்தில் கஞ்சா விற்பனைக்காக குழுவாக இணைந்ததும், இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள்ளேயே கோஷ்டி மோதல் ஏற்பட்டு இந்த மோதல்களின் வெளிப்பாடுகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சண்டையிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இன்ஸ்டாவால் வரும் சண்டையின் கோபத்தால் அவ்வப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது ஆயுதங்களால் வெட்டிக் கொள்வது போன்ற சம்பவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசாரால் அமைக்கப்பட்ட தனிப்படை பெங்களூர், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கோவையில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் தொடர்புடைய ரவுடிகளை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு பிரச்சனைகளை தூண்டும் விதமாகவும், ஆயுதங்களை வைத்து வீடியோ வெளியிடுவது போன்ற செயல் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்களையும் கைது செய்தனர்.  போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கோவை மாநகரில் பதுங்கி இருந்த ரவுடிகள் அனைவரும் அடுத்தடுத்து பிடிபட்டனர். 

இதனிடையே இந்த ரவுடிகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட கேரளாவை சேர்ந்த தில்லி என்ற நபரை தனிப்படை போலீசார் பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வந்தனர். அப்போது அவர் மும்பையில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மும்பை சுற்றுவட்டார மாநிலங்களிலும் தொடர்ந்து தேடி வந்தனர். இறுதியாக மீண்டும் கோவைக்கு வந்து பதுங்கி இருந்த தில்லியை தனிப்படை போலீசார் ரத்தினபுரி பகுதியில் வைத்து கைது செய்தனர். 

அப்போது தப்ப முயன்ற தில்லிக்கு கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட தில்லியும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்தவர் என்பதும், இவர்தான் கஞ்சா மற்றும் ரவுடிசத்திற்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. 8 மாதங்களாக தொடர் தேடுதலில் ஈடுபட்ட போலீசில் சிக்காமல் இருக்க செல்போன் உள்ளிட்ட எந்த தொழில்நுட்பங்களையும் தில்லி பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தார். இருப்பினும் போலீசார் கைது செய்யப்பட்ட ரவுடிகளின் மூலம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தில்லியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். 

ரவுடிகளின் அட்டகாசத்தால் கடந்த இரண்டு மாதங்களாக பரபரப்பாக இருந்த கோவை மாநகரம் மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பியது. ரவுடிகளின் மோதல்கள் ஆகியவை முற்றிலுமாக குறைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு கல்லூரியிலும் போலீசார் தனி கவனம் செலுத்தி மாணவர்களை தவறான வழிக்கு செல்லாமல் கண்காணித்து வருகின்றனர். சன் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் ராகுலுடன் கோவை செய்தியாளர் தென்னிலவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *