ஒரு அறைக்குள் மூன்று வகுப்புகள்… அரசு மேல்நிலைப்பள்ளில் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

படிக்கட்டுகளே பாடசாலை, ஒரு அறைக்குள் மூன்று வகுப்புகள், கூடுதல் வகுப்பறை இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் வேதனை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த  2018 ஆம் ஆண்டு வரை உயர்நிலை பள்ளியாக இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 34 ஆசிரியர்களுடன் இயங்கி வரும் இப்பள்ளியில் 840 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பெரும்பாலான வகுப்புகளுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியிலும், வராண்டாவிலும், படிக்கட்டுகளிலும், திறந்த வெளியையும் பாடசாலையாக பயன்படுத்தி வருகின்றனர். 

இதனால் வெயில் நேரங்களில் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் மேலும் மழை நேரத்தில் வகுப்புகளே எடுக்கப்படுவதில்லையாம். மேலும் பல வகுப்புகளில் மாணவிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லை தாலுகாவின் தலைமையிடமாக செயல்படும் இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலே இந்த நிலை.. பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் நிலையில் இப்பள்ளி உள்ளதால் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. 

கல்வி கற்கும் மாணவிகளுக்கு கவன சிதறல் ஏற்படுவதோடு கற்கும் பாடம் மனதில் பதியவில்லை என்கின்றனர். வகுப்பறை என்பது ஒரு மாணவரை உருவாக்கும் பயிற்சி பட்டறையாகும் கல்வி கற்கும் போது அமைதியான சூழல் நிலவ வேண்டும் அப்போதுதான் மாணவர்கள் தங்கள் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த முடியும் ஆனால் இங்கு படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பதாலும், வராண்டாக்களில் வகுப்பு நடப்பதாலும், கிடைக்கும் மர நிழல்களில் வகுப்பு நடத்தப்படுவதாலும் மாணவர்களுக்கு கல்வி கற்கும் எண்ணங்கள் குறைந்து கவனம் சிதறடிக்கப்படுகிறது. 

எனவே இந்த நிலையை தொடரவிடாமல் மாவட்ட கல்வித் துறை போர்கால அடிப்படையில் களத்தில் இறங்கி மாணவிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் பயிற்சி பட்டறையான வகுப்பறைகளை அதிகப்படுத்தி கவன சிதறல் இல்லாமல் கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்கள், மாணவர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *