வாகன தணிக்கையில் பணம் வசூல் செய்த போலி எஸ்ஐ கைது…!

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் என கூறி சீருடை அணிந்து பணம் வசூலில் ஈடுபட்ட போலி எஸ் ஐ கைது. உதவி ஆய்வாளர் சீருடை, அடையாள அட்டை பறிமுதல். சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியில் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த தேவராஜ் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையில் உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்றதாக பொய்யாக கூறிவந்துள்ளார்..

இந்நிலையில் விஜயமங்கலம் பகுதியில் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்காக பெருந்துறை காவல்துறையினர் சென்றபோது காவலர் சீருடையில் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்த போது தனது பெயர் தேவராஜ் என்றும் திருப்பூரில் குற்ற பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார் இதனை தொடர்ந்து பெருந்துறை காவல்துறையினர் விசாரித்தபோது அதுபோன்ற காவலர் யாரும் பணியாற்றவில்லை என தெரிய வந்ததை தொடர்ந்து தேவராஜிடம் மேலும் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது தேவராஜ் தனது இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்று உள்ளார். உடனடியாக காவல்துறையினர் தேவராஜ் மடக்கி பிடித்து பெருந்துறை காவல்துறை நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் தேவராஜ் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து உள்ளதாகவும் போலியான ஆவணங்கள் தயாரித்து பணம் வசூலில் ஈடுபட முயன்றதும் சிறப்பு உதவி ஆய்வாளர் எனக் கூறி காவலர் சீருடை அணிந்து வாகன தணிக்கை நடத்தி  வடமாநிலத்தவர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.  

இதனை அடுத்து பெருந்துறை காவல்துறையினர் தேவராஜிடம் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளருக்கான சீருடைகள்  மற்றும் போலியான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் தேவராஜை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் எனக் கூறி வாகன தணிக்கையில் ஈடுபட்டு பணம் வசூலில் ஈடுபட்ட போலியான எஸ் ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *