பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது புகார்… பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் அதிரடி

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட  பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல் மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருப்பதால் பரபரப்பு.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.  இந்நிலையில்  பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்றால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என கடந்த வாரம்  திராவிடர் விடுதலைக் கழகம்,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அறிவித்திருந்தனர். 

இதனால் திடீரென கடந்த 26 ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகம் சார்பில்  அதன் பதிவாளர் தங்கவேல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்ற ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் மாவட்ட காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்தனர். இந்த சுற்றறிக்கை மாணவர்கள்,  பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் அவர்களும்,  மாநகர காவல் துறை சார்பிலும் தாங்கள் அது போன்று எந்த ஒரு அறிவுறுத்தலும் அறிவிக்கவில்லை என சுற்றறிக்கை மூலம் மறுப்பு  தெரிவித்திருந்தனர்.   

இதனால் செய்வது அறியாது தவித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின் பேரில் பதிவாளர் பொறுப்பு தங்கவேல் ,  27 ஆம் தேதி மாலை, மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்ற சுற்றறிக்கையை  பெரியார் பல்கலைக்கழகம் வாபஸ் பெற்றது. 

இந்தநிலையில் தான்  பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் , அமைதியை சீர்குலைக்கவும், தமிழக அரசின் உயரிய கோட்பாடுகளை அவமதிக்கும் வகையிலும் திட்டமிட்டு  பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சக்திவேல் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

அதில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் அரசினால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல்துறை மீது அவதூறை பரப்பும் விதமாக பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு அவப்பெயர் உண்டாகும் விதமாக செயல்பட்டுள்ளனர் இது சட்டப்படி குற்றமாகும் எனவே காவல்துறை கூறியதாக ஒரு பொய்யான சுற்றறிக்கையை வெளியிட்ட  பெரியார் பல்கலைக்கழகம் பதிவாளர் தங்கவேல் மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன்  மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புகார் ஒன்றினை வழங்கி உள்ளனர். இது பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *