காலாவதியாகாத மாத்திரைகளை எரித்த அரசு மருத்துவமனை… தீயில் கருகி ஊழியர் பரிதாப பலி…!

மணப்பாறையில் அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகளை தீவைத்து எரிந்தபோது உடலில் தீப்பற்றி படுகாயங்களுடன் சிகிச்சையில் இருந்த தற்காலிக ஊழியர் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (28) இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26 ம் தேதி கலையரசன் மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு அனுப்பி வைககப்பட்டுள்ளார். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருந்து மாத்திரைகளை தீவைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடியுள்ளார். 

உடலில் எரியும் நெருப்புடன் ஓடியவரை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியான அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் 60 சதவீதம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். 

இதற்கிடையே மருத்துவமனையில் எரிக்கப்பட்ட மாத்திரைகள் பெரோஸ் சல்பேட் மற்றும் போலிக் ஆசிட் மாத்திரைகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரைகள் சத்திற்காக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த மாத்திரை கடந்த ஜனவரி மாதத்தில் தான் தயாரிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டின் (2024) இறுதியில் தான் அது காலவதியாகும் தேதி உள்ளது. 

ஆனால் அந்த மாத்திரையை எதற்காக காலாவதியாகும் முன்பே பெட்டி பெட்டியாக எரித்துள்ளனர்.  அதை ஏன் தீவைத்து எரித்தார்கள் என துறை ரீதியாக முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *