சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் தீயில் கருகி பரிதாப பலி…!

பிள்ளையப்பம்பாளையம் பகுதியில் கேஸ் கசிந்து தீ விபத்து. மேலும், ஒரு வட மாநில தொழிலாளி  சிகிச்சை பலனின்றி இறப்பு, பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள பிள்ளைப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில்  பணிபுரிந்து வரும் ஊழியர்கள் நிறுவனத்தை ஒட்டியுள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகின்றனர்.மேலும், இந்த நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச்சேர்ந்த மாதவ்(23), தனஞ்ஜெய் சிங் (24),தரம் பீர் சிங் (35), வீரேந்தர் சிங் (36), அனுராக் சிங்(26) உள்ளிட்ட ஐந்து பேரும் ஒன்றாக அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி அறையில் சமைத்துக்கொண்டிருந்த போது வீட்டில் இருந்த கேஸ் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேரில் தனஞ்ஜெய் சிங், அனுராக் சிங் உள்ளிட்ட இருவரும் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர்.

இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மூவரில் வீரேந்தர் சிங் என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதனால் இவ்விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

பிள்ளையப்பம்பாளையம் பகுதியில் கேஸ் கசிவால் ஏற்பட தீ விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேரில் மூவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான சம்பவம் அன்னூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *