பாவேந்தர் பிறந்தநாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக்க’ ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள்…!

உலகத் தமிழர்களின் ஒருமித்த குரல்! புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவித்திடுக! புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்’ அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக’ அறிவிக்கவேண்டும் என்பது புரட்சிக்கவிஞர் பிறந்தநாளில் ‘திராவிட மாடல்’ அரசுக்கு நமது வேண்டுகோளும், உலகத் தமிழர்களின் வேண்டுகோளுமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (29.4.2023) நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 133 ஆவது ஆண்டு பிறந்த நாள் பெருவிழா! திராவிடர்தம் ஒப்பற்ற திருவிழா! இலக்கியப் பேரின்ப விழா!! தமிழ் மொழியும், இலக்கியமும் எத்தனையோ கவிஞர்களையும், ‘பாவேந்தர்களையும்‘, ‘கவிச்சக்ரவர்த்திகளையும்‘ கண்டுள்ளது.

சுயமரியாதை சூறாவளிக் கவிஞர் ஆனால், இவரின் தனித்தன்மை, புரட்சிக்கவிஞர் என்பதே! தந்தை பெரியார்போல மற்றவர் நுழைய அஞ்சிய ஜாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்து தமது ஆற்றலை, அறிவை, ஆளுமையை எழுச்சி பெற இறுதிவரை வருமானம், புகழ்வேட்டை இவற்றைத் துறந்து, தந்தை பெரியார்தம் இலக்கியக் குரலாய் இறுதிவரை வாழ்ந்த சுயமரியாதை சூறாவளிக் கவிஞர் இவர்! அடர்ந்த மூடநம்பிக்கைக் காட்டை அழிக்க, ஜாதி விஷ மரங்களை வெட்டிச் சாய்க்க, பெண்ணடிமையை அறுத்தெறிய, மானுடம் தழைத்தோங்கி புது உலகம் காண, தனது கவித்திறனை முனை மழுங்காத போர்க் கருவியாக, புரட்சி ஆயுதங்களாக ஆக்கி, புதுத்தடம் பதித்த முற்போக்குக் கவிஞர் இவர்! எனவேதான் இவர் ‘புரட்சிக்கவிஞர்!’ மற்றவர் எளிதில் எட்ட முடியாத புரட்சியின் உச்சம் இவர்! புகழும் பெயரும் அவருக்குத் துச்சம்!

திராவிடர் இயக்கத்தின் தனித்த ‘தகைசால்’ பெருமை! தந்தை பெரியார் கொள்கைகளை, லட்சியங்களை சாகா இலக்கியங்களாக்கி சரித்திரம் படைத்த மேதை இவர்! அச்சம் அவரைக் கண்டு அச்சப்பட்டே ஓடும்! அப்படிப்பட்ட ஒப்பற்ற கவிஞரைப் பெற்ற பெருமை, திராவிடர் இயக்கத்தின் தனித்த ‘தகைசால்’ பெருவெளிச்சம்!

புரட்சிக்கவிஞருக்கு இணை ஏது? மானுடப் பார்வையோடு மண்ணின் சுயமரியாதையை விளைச்சல் நிலமாக்கிய மகத்தான புரட்சிக்கவிஞருக்கு இணை ஏது? கூலிக்குப் பாடிய கவிஞன் அல்ல அவர்! குவலயத்தையே புரட்டிப் போட ஏடெடுத்த ஏந்தல் அவர்!

‘உலகத் தமிழ் மொழி நாளாக’ பிரகடனப்படுத்தி வரலாறு படைக்கவேண்டும் ‘திராவிட மாடல்’ அரசு!

அவரது இந்த நாளை – உலக  மொழிகள் எல்லாம் தாய்மொழி நாளாக ஒவ்வொரு நாளைக் கொண்டாடி மகிழும் வாய்ப்புப் பெற்ற நிலையில், நமது ‘திராவிட மாடல்’ அரசு, புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை ‘உலகத் தமிழ் மொழி நாளாக’ பிரகடனப்படுத்தி, வரலாறு படைக்கவேண்டுமென்ற கோரிக்கை உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்ற காரணத்தால், அவர்களது விருப்ப விழைவை – வேண்டுகோளை நமது முதலமைச்சர் பரிசீலித்து, அறிவித்து, வரலாறு படைத்தால், அதைவிட ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனைக்கு வேறு ஏது சிகரம்? அன்புடன் வேண்டுகிறோம்! வாழ்க புரட்சிக்கவிஞர்! வருக அவர் காண விரும்பிய உலகு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *