ரூ.26.31 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்துவைத்த முதல்வர்!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக ரூ.26.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் – தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.8.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக 26 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோட்ட அலுவலகக் கட்டடம், வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம், துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலகக் கட்டடம் மற்றும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்தின் பல்வேறு வருவாய்ப் பிரிவினர், தொழில்துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், தற்போது இவ்வாரியம் உயரமான கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி திட்டப்
பகுதி 1-ல் 7 கோடியே 37 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோட்ட அலுவலகக் கட்டடம்; திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், சாத்தனூர் கிராமம், கே.கே நகரில், 1.39 ஏக்கர் பரப்பளவில் 11 கோடியே 55 இலட்சத்து
85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம்;

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், தோப்பூர் கிராமத்தில் தோப்பூர் தன்னிறைவு திட்டப் பகுதியில் 4 கோடியே 50 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலகக் கட்டடம்;

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், உச்சப்பட்டி கிராமத்தில் உச்சப்பட்டி பகுதி-VII திட்டப் பகுதியில், 2 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை;

என மொத்தம் 26 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்

Leave a Reply

Your email address will not be published.