புதுக்கோட்டையில் பரபரப்பு!! கோயில் தேர் விபத்தில் 10 பேர் படுகாயம்…

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட பழமைவாய்ந்த பிரகதாம்பாள் கோயில் உள்ளது. இந்த கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு முதன்மை கோயிலாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் இன்றைய தினத்தில் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. குறிப்பாக முதல் தேரில் முருகனும், இரண்டாவது தேரில் விநாயகரும், மூன்றாவது தேரில் பிரகதாம்பாள் வீதிஉலா வந்தனர். அப்போது தேர் இழுக்கும் போது சாய்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்சில் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்த காரணத்தை கேட்டறிந்தனர்.
மேலும், அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் விபத்து தவிர்க்கப்பட்டது அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.