ஈரோட்டில் தாயம் போட்டி: பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!!!

தமிழர்களின் பழமையான விளையாட்டாக கருதப்படும் தாயம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஈரோட்டில் நடைபெற்ற தாயம் விளையாட்டு போட்டியில் ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பழமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்று தாயக்கட்டை அரசிற்கான போட்டியை நடத்தியது. இதில் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பெண்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
போட்டியில் பங்கேற்க 2000 பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 250-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பல கட்டமாக போட்டிகள் நடத்தப்பட்டது. கிராமபுறங்களில் பரவலாக விளையாடப்பட்ட தாயக்கட்டை விளையாட்டை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காகவும், பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் இந்த போட்டியை நடத்துவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசும் வெற்றி பெற்றவர்களுக்கு தாய அரசி பட்டமும் வழங்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் விளையாடுவதற்கு ஆட்கள் இல்லாத கால கட்டத்தில் தற்போது நடைபெற்ற போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.