புகார் இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம்… பக்தர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை!

திருத்தணி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா நேற்று முன்தினம் அஸ்வினி நட்சத்திரத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா இன்று மாலை 7 மணி அளவில் மலை அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மலை அடிவாரத்தில் இருந்து 365 படிகள் வழியாக நடந்து வந்து ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டர்.
இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுரு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து மலைக்கோவிலில் சாமி செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழுங்க அமைச்சருக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
கோயில் இருந்து வெளியில் வந்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்கள் பேசுகையில்: ஆடி கிருத்திகை விழாவின் போது முக்கிய நபர்களின் தரிசனம் குறைக்கப்பட்டதால் சாமானிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளில் சிறந்த முறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்துள்ளனர். விழா நடைபெறும் ஐந்து நாட்களிலும் 24 மணி நேரம் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இது குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக தெரிவிக்கப்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.