முறையாக சாலை வசதி இல்லை… பிணத்தை தோளில் சுமந்து சென்ற அவலம்!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாமல் கம்பியில் கட்டி உடலை எடுத்து சென்ற சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற சூழலில் இன்னும் மலைப்பிரதேசங்களில் இருக்கும் கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதோடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் புறத்திமலை அடுத்த தேனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் முறையாக சாலை வசதி இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாக தெரிகிறது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்த சூழலில் முறையான சாலை வசதி இல்லாததால் பிணத்தை கம்பியால் கட்டி பொதுமக்கள் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியரிடம், வனத்துறையினரிடம் பேசி முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மலை கிராமங்களில் நடைபெறுவதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.