ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் சிவன்; திருமண பேனரால் வெடித்த சர்ச்சை!

கன்னியாகுமரியில் திருமணத்திற்காக வைக்கப்பட்டுள்ள வாழ்த்து பேனரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ். இவர் தனியார் மீன்வலை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது நண்பர்கள் இரண்டு பேனர்கள் வைத்துள்ளனர்.அதில், சிவப்பெருமான் புகைப்பிடிப்பது போன்று உள்ளது. அந்த படத்திற்கு கீழ் முடி சின்னதாக வெட்டி விடுங்க எவ்வளவு சின்னதா… பொண்டாட்டி கையில் பிடிக்க முடியாத அளவுக்கு… என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவப்பெருமான் புகைப்பிடிப்பது போன்ற படங்கள் உள்ளதால், இது குறித்து இந்து அமைப்பினர் இரணியல் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரண்டு பேனர்களையும் அகற்றினர்.
மேலும் திருமண கோலத்தில் இருந்த புதுமாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர்களை கண்டித்ததோடு திருமணத்திற்கு பின் விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறினார். திருமணத்திற்காக வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பேனர், மாப்பிள்ளையை காவல்நிலையம் வரை செல்ல வைத்து விட்டதே என அப்பகுதி மக்கள் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.