கனமழை எதிரொலி: வால்பாறை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!!

விடுமுறை

கோவை மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் 49 அடி உயரம் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டமானது வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக 12 நாட்களில் 15 அடிக்கு மேல் உயர்ந்து தற்போது 18 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் வால்பாறை அருகே சின்ன கல்லாறு பகுதியில் அதிகப்பட்சமாக 12 செ.மீ, வால்பாறையில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் கொட்டி தீர்த்த கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பொள்ளாச்சி அருகே வீட்டில் 30 அடி பாதுகாப்பு சுவரின் பக்கவாட்டில் இடிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, பந்தலூர், கூடலூர் மற்றும் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள தொரப்பள்ளி தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மாயாறு அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் குறுக்கே இருந்த மண் பாதை அடித்துச்செல்லப்பட்டது.

இதனிடையே மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், வால்பாறை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.