தலையில் ஹெல்மெட், வாயில அல்வா! புது ரூட்டில் சிந்தித்த காவல்துறை..

நெல்லை மாநகரம் முருகன் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல்நிலையத்தை திறந்து வைப்பதற்காக சென்ற நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் திடீரென தனக்கு பதிலாக அங்கிருந்த பெண் காவலரை அழைத்து அவர் கையால் புறக்காவல் நிலையத்தை திறக்க செய்தார்.
அதன்பின் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த அவர் அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு நெல்லையில் முக்கிய உணவாக கருதப்படும் அல்வாவை வழங்கி வாகன ஓட்டிகளை குஷி படுத்தினார்.
கொளுத்தும் வெயிலில் வியர்த்து வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகள் திடீரென அல்வா கிடைத்த மகிழ்ச்சியில் அங்கேயே ருசித்து சென்றனர். மேலும் தொடர்ந்து இதுபோன்ற போக்குவரத்து நடைமுறைகளை கடைபிடிக்கும் படி வாகன ஓட்டிகளுக்கு துணை ஆணையர் அறிவுரை வழங்கினார்.
அதேபோல் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காவல்துறை அதிகாரியின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.