ஊராட்சி மன்ற தலைவருக்கு மிரட்டல்; சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சுங்கச் சாவடியில் ஸ்தலவரி, விளம்பர வரி உட்பட பல லட்ச ரூபாய் அளவில் வரி பாக்கி – வசூல் செய்யச் சென்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு சுங்கச்சாவடி நிர்வாகம் மிரட்டல்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. துவக்கப்பட்ட நாளிலிருந்து திருமங்கலம் நகர் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுடன் போராட்டங்களையும் நடத்தி வந்த நிலையில் , விதி மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி , பலமுறை ஆட்சியர், மற்றும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு என்ற வாய்மொழி உத்தரவில் , கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் , தற்போது இரண்டு தினங்களாக உள்ளூர் வாகனங்களுக்கு இரண்டு வருட காலமாக சுங்கச்சாவடி பயன்படுத்தியதற்கு ரூபாய் இரண்டு லட்சம் வரை செலுத்த கூறி , வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு , தற்போது பிரச்சனை எழுந்துள்ளது.
இந்நிலையில் சுங்கச்சாவடியை திருமங்கலம் நகர் மக்கள் இது தொடர்பாக முற்றுகையிட்ட போது, அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரகாஷ் அங்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இதனை தொடர்ந்து கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் தவமணி, சுங்கச்சாவடி நிர்வாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்தல வரி, விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டதற்கான வரியை செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் பாக்கி உள்ளதாக கூறி வசூல் செய்ய சென்றபோது , சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தன்னை மிரட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் சுங்கச்சாவடி தங்களுக்கு சொந்தமான இடம் எனவும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவியுங்கள் , எதற்கும் அஞ்ச மாட்டோமென சுங்கச்சாவடி நிர்வாகம் மிரட்டல் கொடுத்ததாக தெரிவித்தார். இது குறித்து காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார் மனு அளித்துள்ளார்.