14-வயது சிறுமி கர்ப்பம்! கருவை கலைக்க காதலனின் விபரீத முயற்சியால் பலி..
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14-வயது சிறுமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. தாய் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிந்ததும் முருகன் அவரது நண்பர் பிரபு ஆகியோர் போலி மருத்துவர் என கூறப்படும் 65 வயதான மூதாட்டி காந்தி என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார்.
மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறி உள்ளார். இதனையடுத்து சிறுமியின் கருவை கலைக்க முருகன் மற்றும் பிரபு ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த இரண்டு நாட்களாக போலி மருத்துவர் காந்தி ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் ஊசி செலுத்தியபோது சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் படி தாணிப்பாடி போலீசார் நேற்று அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்த முருகன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆனதை அறிந்து நண்பரான பிரபு என்பவரின் உதவியுடன் போலி மருத்துவரை அணுகி காந்தியை சந்தித்து கருவை கலைக்க முயன்றது தெரியவந்தது.
போலீசார் போலி மருத்துவர் காந்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அருகிலிருந்த ஊசி, மருந்து, மாத்திரைகள், பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் முருகன், பிரபுவை கைது செய்தனர். அதோடு போலி மருத்துவரிடம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.