என்னை மன்னிச்சுடுங்க! மனம் திருந்தி திருடிய பணத்தை உண்டியலிலேயே போட்ட திருடன்….

ராணிப்பேட்டை மாவட்டம் இலாலாகிரி அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரி மலையில் ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோயில் வளாகத்தில் 1008 சிவலிங்கம் உள்ளன.

சித்ராபவுர்ணமி நடைபெற்ற சில தினங்களுக்குள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டுப்போனது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தில் சிப்காட் போலீசார் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கோயில் நிர்வாகத்தினர் 1008 சிவலிங்கங்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்தனர். அப்போது அதில் ஒரு கடிதமும் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே அந்த கடிதத்தை படித்த போது என்னை மன்னித்து விடுங்கள் நான் சித்ரா பௌர்ணமி தினத்தில் தெரிந்தே கோயில் உண்டியலில் பணத்தை திருடி விட்டதாகவும் அப்போதில் இருந்து தனக்கு நிம்மதி இல்லை என்றும் வீட்டில் நிறைய பிரச்சினை ஏற்பட்டு வருவதாக கூறி இருந்தார்.

மேலும் நான் மனம் திருந்தி கோயில் உண்டியலில் இருந்து திருடிய பணத்தை அதே உண்டியலில் போட்டு விட்டதாகவும் எல்லோரும் தன்னை மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார். கடவுள் தன்னை மன்னிப்பாரா என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த நபர் அனைவருக்கும் வணக்கம் என கூறி முடித்துள்ளார்.

கடிதத்தைப் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர் இந்த கடிதத்தை சிப்காட் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் மனம் திரும்பி மீண்டும் உண்டியலில் மன்னிப்பு கடிதத்துடன் செலுத்திய சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *