கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி முதல்வரை பணியிட மாறுதல் செய்யக்கோரி கல்லூரிப் ஆசிரியர்கள் இன்று இரவிலிருந்து காலவரையற்ற தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரியின் முதல்வராக துரையரசன் என்பவர் உள்ளார். நிதி மற்றும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஆசிரியர் விரோதப் போக்கு காரணமாக இவரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
இந்த கோரிக்கையை முன்னிறுத்தி கடந்த 15ஆம் தேதி இரவு இவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூரில் உள்ள மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் நேரில் வந்து கல்லூரி முதல்வர் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கல்லூரி கல்வி இயக்குனர் தொலைபேசியில் கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் . இவர்கள் கல்லூரி முதல்வர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று இரவிலிருந்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது தொடர் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக தேர்வோ, அல்லது ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பெறுவது உள்ளிட்ட எந்த பணிகளும் பாதிக்காது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.