புறக்கணிக்கப்படும் ரூ.10 நாணயம்! சேலத்தில் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய காரை வாங்கிய வாலிபர்…

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த ரவி, சிவகாமி தம்பதியரின் மகன் வெற்றிவேல்(26) . பெற்றோர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வாழும் நிலையில் , வாலிபர் வெற்றிவேல் அரூர் பகுதியில் ப்ளே ஸ்கூல் எனப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டுப்பள்ளி ஒன்றை வைத்து ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்தநிலையில் தனது விளையாட்டு பள்ளியில் பயிலும் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள், பத்து ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார்.

பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனக்கூறி கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாங்க மறுத்து வருவதாலும், அந்த நாணயங்கள் பயன்பாட்டில் இல்லாததாலும், அந்த நாணயத்தை விளையாட்டு பொருளாக எண்ணி குழந்தைகள் அதை உருட்டி விளையாடுகின்றனரே எனத் தவித்த வெற்றிவேல் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் ரிசர்வ் பேங் ஆப் இண்டியா, பத்து ரூபாய் நாணயம் செல்லும் என அறிவித்துள்ளதால், அது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பத்து ரூபாய் நாணயங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டுவர வேண்டும் என எண்ணி 6 லட்சம் ரூபாய்க்கு, பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்தார். தனது குடும்பத்தினருடன் இணைந்து ஒரு மாத காலத்தில் பல்வேறு வங்கிகளின் படி ஏறி, 60 ஆயிரம், பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்தார்.

அதாவது ஆறு லட்சம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்த வெற்றிவேல் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கார் விற்பனை நிறுவனத்தில் புதிய கார் ஒன்றை புக்கிங் செய்து இன்று வாங்கினார். இதற்காக 400 கிலோ எடை கொண்ட 60 ஆயிரம் பத்து ரூபாய் நாணயங்களை முப்பது, முப்பது கிலோவாக பிரித்து சாக்குப்பைகளில் போட்டு, வேன் மூலம் எடுத்து வந்தார். பின்னர் அதனை கார் நிறுவனத்தில் ஒப்படைத்தார்.

அதனை ஐந்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், சரியாக உள்ளதா? என சுமார் மூன்று மணி நேரம் எண்ணிப் பார்த்ததாக கூறப்படுகிறது. தனது எண்ணம் நிறைவேறியது குறித்து வெற்றிவேல் கூறும்போது, பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தன் அரும்பாடுபட்டு ஒரு மாத காலத்தில் 60 ஆயிரம் ரூபாய் நாணயங்களை பல்வேறு வங்கிகள் மூலம் சேமித்ததாகவும், பின்னர் தனது விருப்பத்தை, தனியார் நிறுவனத்திடம் எடுத்துக்கூறி ஒத்துக் கொள்ள வைத்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து மொத்தம் 14 வகையான பத்து ரூபாய் நாணயங்கள் உள்ளதாகவும், பல்வேறு இடங்களில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பல்வேறு வங்கி மேலாளரை அணுகி பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து தற்போது தனது கனவை நிறைவேற்றி உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மகனின் சாதனை குறித்து தாய் சிவகாமி கூறும்போது , தனது மகன் எடுத்த முயற்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமியை வேண்டிக் கொண்டதாகவும், தற்போது மகனின் எண்ணம் நிறைவேறி விட்டதால், அந்தக் கோயில்களுக்குச் சென்று தனது நன்றியை சாமிக்கு காணிக்கையாக்க உள்ளதாகவும் உருக்கமுடன் தெரிவித்தார்.

மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளப்படி, பத்து ரூபாய் நாணயங்களை அனைத்து கடைகளிலும் வாங்க வேண்டும் என வாலிபர் வெற்றிவேல் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *