தாய் இறந்தது தெரியாமல் பாசத்திற்காக ஏங்கும் தேவாங்கு குட்டிகள்!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் வனப்பகுதியில் அரிய வகை தேவாங்குகள் வசித்து வருகிறது. இந்த நிலையில் குருந்தம்பட்டி தண்ணீர் கரடு அருகே பெண் தேவாங்கு ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானதாக வன அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்த வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்து உயிரிழந்த தேவாங்கை மீட்க சென்றனர். அப்போது இறந்து கிடந்த பெண் தேவாங்கிடம் இரண்டு குட்டிகள் தாய் இறந்தது கூட தெரியாமல் தாயின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதை பார்த்த அப்பகுதியினர் தாயின் பாசத்திற்கு ஏங்கும் குட்டிகளை கண்டு மனவேதனை அடைந்ததாக தெரிவித்தனர். பின்பு குட்டிகளைப் பிரித்து உயிரிழந்த பெண் தேவாங்கை மீட்டு அய்யலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

இரண்டு குட்டிகளையும் மீட்ட வன அலுவலர்கள் அதனை அய்யலூர் வன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு இரண்டு குட்டிகளும் ஒன்றுக்கொன்று கட்டிப் பிடித்துக் கொண்டது அதை மீட்க முடியாமல் வன அலுவலர்கள் நீண்ட நேரம் போராடி தனித்தனியாக மீட்டனர்

இதுகுறித்து வன அலுவலர் ஒருவர் கூறுகையில் தாய் இல்லாததால் இரண்டு குட்டிகளும் ஒன்றுக்கொன்று கட்டிப்பிடித்துக்கொண்டு தங்களது பாசத்தை காட்டியதாகவும் இதனால் குட்டிகளை பிரிக்க முடியாமல் நீண்ட நேரம் போராடிய தாகவும் தெரிவித்தார்.

மேலும் அரிய வகை தேவாங்கு வசிக்கும் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பொறுப்புணர்வுடன் செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளை இதுபோன்று விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வன அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *