ஆசனூரில் காய்கறி வாகனத்தை அடித்து நொறுக்கிய யானைகள்: உயிர் தப்பிய ஓட்டுனர்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் இருந்து ஈரோட்டுக்கு சக்கரவள்ளி கிழங்கு பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் இன்று மாலை 5.00 மணி அளவில் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் சரக்கு வேனை வழிமறித்தது. பின்னர் சரக்கு வாகனத்தில் பின்னால் சென்று கரும்பு உள்ளதா என தேடியது. கரும்பு இல்லாத காரணத்தால் சரக்கு வாகனத்தை தும்பிக்கையால் அடித்து நொறுக்கியது. இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அச்சமடைந்த ஓட்டுநர் அங்கிருந்து குதித்து தப்பி ஓடி உயிர் தப்பினார்.

கரும்பு இல்லாத காரணத்தால் யானைகள் சரக்கு வேனை தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியது. பின்னர் மூட்டையில் இருந்த கிழங்குகளை யானைகள் தின்றது. மேலும், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து யானைகள் வாகனங்களை வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *