அக்னிபாத் திட்டம்! சென்னையிலும் வெடித்தது போராட்டம்..
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் போர் நினைவுச்சின்னம் அருகே 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குறிப்பாக அக்னிபாத் திட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தால் ராணுவ வீரர்கள் முழுமையாகப் பாதிக்கப்படும் என இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனிடையே போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், இளைஞர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வண்ணமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து போராட்டமானது வன்முறையாக மாறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் எனவும் திங்கள் கிழமை வேலை நாள் என்பதால் உயர் அதிகாரிகள் அந்த சாலையில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் பஸ், லாரி தீவைத்தல், கடைகள் அடைப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதோடு ஒடிசாவில் 23 வயது இளைஞர் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.