காலி மது பாட்டில்களை ரூ.10 க்கு திரும்பப் பெறும் திட்டம் அமல்: மதுபிரியர்கள் வேதனை!
கொடைக்கானலில் காலி மதுபாட்டில்களை கொடுத்த பத்து ரூபாய் பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்களில் காலி மது பாட்டில்களை தூக்கி வீசுவதால் பல்வேறு சூழலுக்கு கேடு விளைவிப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து காலி மது பாட்டில்களை கொடுத்து பத்து ரூபாய் பெறும் திட்டத்தை கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி,கொல்லிமலை, மேகமலை போன்ற மலை பிரதேசங்கள் தேசிய சரணாலயங்கள் மற்றும் பூங்காக்களில் இத்திட்டத்தை அமல்படுத்த உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது.
அதனடிப்படையில் திண்டுக்கல் மலைப்பிரதேசத்தில் உள்ள 10 மதுபான கடைகளில் காளி மதுபாட்டில்களை கொடுத்து பத்து ரூபாய் பெறும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை உள்ளூர் மக்கள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றனர்.
இத்திட்டத்தை செயல்படுத்தி வந்த ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவது மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொலைவிலிருந்து மது வாங்கி செல்பவர்கள் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை மீண்டும் அதே கடையில் காலி மது பாட்டில்களை கொடுத்து வாங்குவதற்கு சிரமம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் காளி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் ஏற்கனவே மே 15ஆம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.