கூவம் ஆற்றில் இறங்கி போராடி மக்களை நினைவிருக்கா?… அவர்களுக்காக அரசு செய்த செயல்!
சென்னை சத்தியவாணி முத்து நகரில் உள்ள 178 குடும்பங்களை புளியந்தோப்பு கேபி பூங்கா குடியிருப்போருக்கு மறு குடியமர்வு செய்வது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ் குமார், துணை ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு தயாநிதி மாறன் எம்.பி மற்றும் அமைச்சர் சேகர் பாபு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தயாநிதி மாறன் எம்பி :- சென்னை துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகரில் கூவம் கரையோரமாக இருந்த 178 குடும்பங்களுக்கு புளியந்தோப்பு கேபி பூங்காவில் அந்த மக்கள் திருப்தி அடையும் வகையில் வசதிகளோடு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள சத்தியவாணி நகரில், கூவம் ஆற்றங்கரை ஓரம் உள்ள வீடுகளை ஆக்கிரமிப்பில் இருப்பதாகச் சொல்லி காலி செய்ய பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு வசித்து வந்தவர்களுக்கு சென்னை பெரும்பாக்கத்திலுள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதையடுத்து டிசம்பர் மாதம் 2020ம் ஆண்டு, சத்தியவாணி நகரிலுள்ள வீடுகளை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். அப்போது தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அருகிலுள்ள கூவம் ஆற்றில் இறங்கி இருபதுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.