ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் திடீர் சோதனை… காரணம் என்ன?
பிரபல நிறுவனமான ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஸ்கேன் மையம் ஆர்த்தி ஸ்கேன் மையம் ஆகும். வடபழனியில் இதன் கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பத்து மாநிலங்களில் குறிப்பாக 6 மெட்ரோ நகரங்களில் மொத்தம் 86 கிளைகளை ஆர்த்தி ஸ்கேன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 65 கிளைகள் உள்ளது. இதன் உரிமையாளர் கோவிந்தராஜன். இதன் நிர்வாகிகள் பிரசன்னா மற்றும் ஆர்த்தி பிரசன்னா ஆகியோர். இன்று காலையில் இருந்து தமிழகத்தில் மட்டும் குறிப்பாக 25 இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் செயல்படும் இடங்களிலும் மற்றும் அதில் பணிபுரியும் சில மருத்துவர்கள் வீடுகளிலும் அதன் உரிமையாளர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் வருமான வரி சோதனை வருகிறது. குறிப்பாக சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் மற்றும் தஞ்சை மணி மண்டபம் அருகில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர் ஆகிய இடங்களில் சோதனை நடந்து வருகிது.
கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி நிறுவனர் கோவிந்தராஜன் வீடு, ஆர்த்தி திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைபோல நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆர்த்தி சி.டி ஸ்கேன் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வருமான வரி சோதனைக்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் ஸ்கேன்கள் பரிசோதனைகள் தனியார் ஸ்கேன் சென்டர்களில் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக சோதனை நடைபெறும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் அதிக அளவு ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அதை முறையாக கணக்குக் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த சோதனை நடை பெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறுகிய காலத்தில் அதிக அளவு கிளைகளை திறந்து அதிகளவு முதலீடு செய்ததும் பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மிகப் பெரிய நிறுவனம் பெரிய அளவிலான முதலீடு ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக சோதனை எனவும் வருமானவரித்துறை வட்டார தகவலாக இருக்கிறது.