இரவில் தொடரும் அவலம்… மின்சாரத்துறை ஊழியர்கள் அலட்சியத்தால் மக்கள் அவதி!

மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சிய போக்கால் மீண்டும் மீண்டும் தீ விபத்துகுள்ளாவதால் அண்ணாநகரிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சென்னை அண்ணாநகர்,திருமங்கலம் பகுதியில் 15மாடிகளை கொண்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சுமார் 2:30மணிக்கு குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள மின்மாற்றி, மின்சாரம் கணக்கெடுக்கும் பகுதியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், மின்சார துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தும் எந்த பயனுமில்லை என்பதை உணர்ந்து குடியிருப்பு வாசிகள் தீயை அணைக்க துவங்கினர். கால தாமதமாக வந்த தீயணைப்பு வாகனம், தீ விபத்து பெரிய அளவில் ஏற்படாமல் இருக்க தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் தற்போது வரை மின்வாரிய ஊழியர்களோ,அலுவலர்களோ யாரும் வரவில்லை என்று குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். மின்சாரத்துறை அலுவலகத்திற்கு தீ விபத்து குறித்து தகவல் கொடுத்தால் அவர்கள் அலட்சியமாக எதையும் கண்டுகொள்வதில்லை என்றும் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் எப்போது வரும் என்று அதிகாரிகளை கேட்டால் தெரியாது, வரும் என்று சரியான பதிலை கூறமறுக்கிறார்கள் என்கின்றனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தால் மின்சாரமின்றி தற்போது வரை குழந்தைகள் பெண்கள், முதியோர்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற தீ விபத்து ஏற்கனவே கடந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது என்றும் அப்போதும் குறையை முழுமையாக சரி செய்யாமல் விட்டு விட்டததால் தான் இதுபோன்ற தீ விபத்து ஏற்படுகிறது என்று குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *