தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா?… அமைச்சர் மா.சு. விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த போதிலும் வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களால் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் மட்டும் 8023 நபர்கள் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
யானைக்கால் நோய் தொற்று நோய் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் அங்கிருந்து தமிழகம் வரக்கூடிய மாணவர்களால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி சிறந்து, அதனால் வரும் 12ந் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு என்பது இல்லை என கூறிய அமைச்சர், பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வருபவர்களை கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.