உதகை மலர் கண்காட்சி: தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் !!

உதகையில் 124-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக உதகையில் அனைத்து கண்காட்சிகளும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது தொற்று பரவல் மிகவும் குறைந்துள்ளதால் நடப்பாண்டிற்கான கோடை விழா கடந்த 8ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த கோடைவிழாவின் முக்கிய நிகழ்சியான 124-வது மலர் கண்காட்சி இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் அரசு தாவிரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த ஆண்டின் சிறப்பம்சமாக ஒரு லட்சம் மலர்களாலான தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது 80 அடி நீளத்திற்கும் 20 அடி அகலம் கொண்ட தத்துருபமாக அமைக்கப்பட்டு பிரமாண்டமாக மலர் அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் 124- வது மலர் கண்காட்சியை குறிப்பிடும் வகையில் மலர் கேலரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உதகை கண்டறியப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிய நிலையில் இதனை குறிப்பிடும் விதமாகவும், சுற்றுலாப்பயணிகளுக்கு இது குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும் ஊட்டி 200 என்ற 20 ஆயிரம் கொய் மலர்களை வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் மஞ்சள் பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் ரோஜாக்கள் கொண்டு மஞ்சள் பை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசிப்பது மட்டும் இல்லாமல் 35 ஆயிரம் தொட்டிகளில் விலைவிக்கப்பட்ட 275 வகை மலர் செடிகளும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், 124-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உதகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *