சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 75% கடன்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 75% கடன் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதனை சிறு குறு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அளவுக்கு உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் பங்கு என்ன என்பது குறித்து இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) நடத்திய கருத்தரங்கில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சிறு குறு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும், விவசாயத்துக்கு நிகராக அதிக வேலை வாய்ப்பு அளித்து வரும் துறையாக சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை விளங்குவதாக தெரிவித்தார்.

சிறு குறு துறையை மேம்படுத்த தனியாக குழு அமைத்து, குழு அளித்த அறிக்கையின்படி படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழில் முனைவோர்களுக்கு இந்தியாவிலேயே 90% கடன் உத்தரவாதம் வழங்கும் அரசு தமிழக அரசு தான் தொழிற்பேட்டையில் உள்ள 1341 மனைகள் காலியாக இருந்தன. இதற்கு காரணம் கடந்த அரசு ஆண்டுக்கு ஒரு முறை மனைக்கான வழிகாட்டி மதிப்பை கூட்டியதே காரணம். இதை உணர்ந்ததும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அதை கவனத்தில் கொண்ட முதலமைச்சர், தொழிற்பேட்டையில் உள்ள மனையின் விலைகளை 5 முதல் 75% வரை குறைத்ததன் காரணமாக பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளார்கள்.

சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கவே TAICO வங்கி துவங்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆட்சியில் நகைக்கடன், வீட்டுக்கடன் போன்ற கடன்கள் தான் வழங்கப்பட்டது.

தற்போதைய அரசில் தாய்கோ வங்கியில் 75% சிறு குறு நிறுவனங்களுக்கு தான் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வைத்துள்ள ஒரு டிரில்லியன் என்ற இலக்கினை அடைய அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *