வீரபாண்டி கோவில் விழாவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலி !!
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ராட்டினத்திற்காக அமைக்கப்பட்ட போக்கஸ் விளக்கிற்காக மின்கம்பத்தை சரி செய்த தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் கௌரி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொழுதுபோக்கு அம்சமாக ராட்டினங்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக 50 மேற்பட்ட ராட்டினங்கள் கோவிலின் காலியான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக ராட்டின உரிமையாளர்கள் தங்களது சொந்த செலவில் ஜெனரேட்டரை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் உப்பார் பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் (வயது 32). இவர் ராட்டினம் இயக்கும் எலக்டிரிசனாக பணிபுரிந்து வருகிறார். அதோடு ராட்டினம் இயக்கும் தொழிலிலும் ஈடுப்பட்டு வருகிறார். அந்தவகையில் இரவு முழுவதும் ராட்டினத்தை இயக்கிவிட்டு காலையில் ராட்டினத்திற்கு அமைக்கப்பட்ட போக்கஸ் விளக்கானது காலையில் எரியாமல் இருந்துள்ளது.
இதனால் விளக்கை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.