உயிர் காக்கும் சேவையில் மாணவிகள்… கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி சார்பில் ரத்த தான முகாம்!
ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ஏராளமான கருத்தரங்கள், கலை நிகழ்ச்சிகள், பொங்கல் விழா ஆகியவற்றை நடத்தி வருகிறது.
மேலும் மாணவிகள் தங்களது சமூக பொறுப்புணர்வை உணர்ந்து செயலாற்றும் வகையில் நாட்டு நலப்பணித் திட்டம்(என்.எஸ்.எஸ்) மூலமாக நீர் நிலைகளை பாதுகாப்பது, மரம் நடுதல், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொள்வது, கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியின் “Donate-the Gift of Life” என்ற பெயரில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.), யூத் ரெட் கிராஸ் (YRC), ரெட் ரிப்பன் கிளப் (RRC), போன்ற அமைப்புகளில் செயல்படும் மாணவிகள் ஒன்றிணைந்து ரத்த தான முகாமை நடத்தினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் இணைந்து 100க்கான மாணவிகள் ரத்த தானம் செய்தனர். இந்த ரத்த தான முகாம் மூலமாக 70 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்து போன்ற அவசர சிகிச்சையின் போது உயிர் காக்க உதவும் ரத்தத்தை தானமாக வழங்குவது ஒவ்வொருவரின் கடமை என்பதையும், ரத்த தானம் கொடுக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்பதையும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.