துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தாருங்கள் !! – மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனத்திற்கும், ஆதீனத்தின் மடத்திற்கும் பாதுகாப்பு வழங்ககோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனத்திற்கும் மதுரை ஆதீனத்தின் மடத்திற்கும் பாதுகாப்பு வழங்ககோரி அவரது வழக்கறிஞர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சோலைக்கண்ணன் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்று அளித்துள்ளனர்.
அதில் தருமபுர ஆதீனத்திற்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பேசினார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ஆதீனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் சொத்துக்கள் திருப்புறம்பியம் போன்ற பகுதிகளில் உள்ளது.
இதில் உள்ள கடைகள் மற்றும் குத்தகை பாக்கியை மதுரை ஆதீனம் அவர்கள் தீவிரமாக வசூல் செய்து வருகிறார். இந்த வாடகையை தர காலம் தாழ்த்தி வரும் குத்தகைதாரர்கள் மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுவதாக அம்மனுவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்துசமய எதிர்ப்பாளர்கள் மதுரை ஆதீனம் மடத்தை தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என வழக்கறிஞர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த சோலைக்கண்ணன் ஆகியோர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.