நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்… அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி எச்சரிக்கை!

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளதாவது: பிரபல நாளிதழில் நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு முப்பது ரூபாய் லஞ்சம் கொடுக்கப்படுவதாக கட்டுரை ஒன்று வெளியானது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் படித்து, என்னை செல்போனில் உடனே அழைத்து, தவறுசெய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை ரூ.10-ஆக உயர்த்தியதுடன், பருவகாலப் பட்டியல் எழுத்தர்களுக்குத் தினப்படியாக ரூ.120 மற்றும் பருவகால உதவுபவர்களுக்கும், காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100-ம் கூடுதலாக வழங்க உத்தரவிட்டார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்ததைப்போல, நெல் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40 பெற்றதை நிறுத்துவதுடன், இந்த ஆட்சியில் விவசாயிகளிடமிருந்து ஒரு பைசாகூட பெறக்கூடாது என்ற நோக்கில், ஆண்டுக்கு அரசுக்கு ரூ.83 கோடி கூடுதல் செலவானாலும், நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது என்று கூறி, அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி, நெல்கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அவ்வாறே செய்ததுடன், ஆய்வுக் கூட்டங்களிலும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், மூட்டைக்கு ரூ.30 பெறப்படுகிறது என்ற புகார் வருவது வேதனையாக உள்ளது. இனி யாராவது இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநரிடம், தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதுடன், அனைத்து மண்டல அலுவலகங்கள், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு கூறியுள்ளேன். விவசாயிகள் தங்கள் நெல்லுக்கு ஒரு பைசாகூட கொடுக்க தேவையில்லை.

கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்படவில்லை. ஆனால், சன்னரக நெல் குவிண்டாலுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.30 உயர்த்தி ரூ.100-ஆகவும், பொது ரகத்துக்கு ரூ.25 உயர்த்தி ரூ.75-ஆகவும் கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

கடந்த ஆட்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.55 பைசா மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில், முதல்வர் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மூட்டை ஒன்றுக்கு ரூ.6.75 உயர்த்தி வழங்கியுள்ளார். எனவே, திமுக அரசின் நோக்கத்தைப் புரிந்து, அனைவரும் செயலாற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…