காவல் துறையில் காவிகளின் ஊடுருவலா? – கி.வீரமணி

‘தேசப் பிதா’ என்று நாட்டில் உள்ள மனிதநேய உணர்வாளர்கள் அனைவராலும் அழைக்கப்படும் காந்தியாரை, கோட்சே கும்பல் சுட்டுக்கொன்றதை வன்மையாகக் கண்டித்து, காந்தியாருக்கு நாடு நினைவேந்தல் செலுத்திக் கொண்டிருக்கும் அதே நாளில் (30.1.2022) குவாலியரில் ஹிந்து மஹாசபையைச் சேர்ந்தவர்களும், காவிச் சாமியார்களும், ‘கோட்சே – ஆப்தே ஸ்மிருதி திவாஸ்’ என்று இருவருக்கும்  ஒரு விழா நடத்தி, அதில் ‘கோட்சே – ஆப்தே பாரத ரத்னா’ என்ற பெயரில் விருது ஒன்றினை காளிச்சரண் மகராஜ் என்பவருக்கு அறிவித்துள்ளனர். இவர் சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற தர்ம சன்சாத் என்ற சாமியார்கள் நிகழ்ச்சியில், காந்தியாரைப்பற்றி அவதூறாகப் பேசியமைக்காக கைது செய்யப்பட்டவராவார். மேலும், நான்கு ஹிந்து மஹா சபா சாமியார்களுக்கு இவ்விருதை அறிவித்ததோடு, ”பன்னாட்டு ரீதியில் மீண்டும் பாகிஸ்தானையும் இணைத்து, அகண்ட பாரதத்தை உருவாக்குவோம்” என்றும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் இந்நிகழ்ச்சி நேற்று (30.1.2022) நடந்துள்ளது.

குவாலியர் நிகழ்வு: ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதா?

குவாலியரில் செய்தியாளர்கள் சந்திப்பில், ஹிந்து மஹா சபாவின் தலைவரான பரத்வாஜ் என்பவர், ”ஹிந்து மஹா சபாதான் சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்காற்றியது; காந்தியின் கைராட்டினத்தால்தான் சுதந்திரம் கிடைத்தது என்று மக்கள் திசை திருப்பப்பட்டிருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். ”சாமியார்கள்தான், ஏராளமான தியாகம் செய்துள்ளனர்” என்றும் பேசியுள்ளார்.

ஒன்றிய அரசும், மாநில அரசும் இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றனவா? 

அண்டை நாட்டை இணைப்போம் என்று கூறி, நாட்டு மக்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது, பன்னாட்டரங்கில் இந்தியாவுக்கும், ஒன்றிய அரசுக்கும் பெருமை தருவதாக ஆகுமா?

இந்நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் ”பாரத ரத்னா” எனும் பெயரில், அரசு அல்லாத பிறர் விருது வழங்க அனுமதி உண்டா? அதுவும் காந்தியாரைக் கொலை செய்த கோட்சே – ஆப்தே பெயரில் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுவதும், அது அனுமதிக்கப்படுவதும் ஏற்கத்தக்கதா? யார் வேண்டுமானாலும் ‘பாரத ரத்னா’ பெயரைப் பயன்படுத்தலாமா?

இதன்மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையையும் அந்த மாநில அரசோ, ஒன்றிய அரசின் உள்துறையோ எடுக்காமல் மவுனம் சாதித்தால், அதன் பொருள் என்ன? ”மவுனம் சம்மதத்திற்கு அனுமதி – அறிகுறி – அடையாளம்!” என்பது பழமொழி அல்லவா?

இந்தியாவின் பெயரை மாற்றி, ‘ஹிந்துராஷ்டிரம்’ என்று பெயர் சூட்டவேண்டுமாம்!  கொலைகளை நியாயப்படுத்திப் பாராட்டும் கொடுஞ்செயல் காவிக் கூட்டத்தின் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

ஒருபுறம் காந்தியார் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை – இன்னொருபுறம் குவாலியரில் அவமரியாதையா?

ஒருபுறம் பிரதமர் மோடி, காந்தியார் நினைவு நாளில் மலர்வளையம் வைத்து வணங்குகிறார்; மறுபுறம் அவரது ஆட்சியில், அவரது கட்சி ஆளும் மாநிலத்தில் இப்படிப்பட்ட வன்முறைக்கு வரவேற்பு கூறும் வன்கணாளர்கள் தங்களின் வக்கிர புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதைக் கண்டும் காணாமல் இருப்பது நியாயம்தானா?

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ என்ற மனிதாபிமானத்தின் சின்னமான ஆட்சியின் ஒப்பற்ற தலைவர் சரியாக ஓங்கி அடிப்பதுபோல, ”கோட்சேவின் வாரிசுகளுக்கு இங்கே – இந்தியாவில்  இடமில்லை” என்று கூறியது எப்படிப்பட்ட சரியான பதிலடி என்பதும், முன்னோக்குடன் கூறிய மொழிகள் என்பதும் புரிகிறதல்லவா?

கோவையில் நடந்ததென்ன?

இந்த நிலையில், கோவையில் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் (சி.பி.எம்.), கோவை இராமகிருஷ்ணன் மற்றும் முற்போக்காளர்கள் கூடி, மதவெறிக் கண்டன உறுதி மொழி ஏற்றபோது, மேடை நோக்கி வந்து, ‘கோட்சே பெயரை நீங்கள் கூறக் கூடாது’ என்று அவர்களை சில காவல்துறை அதிகாரிகள் தடுத்தது அதிகப் பிரசங்கித்தனம்;  நிகழ்வின் இடையே தடுத்தது  அதீதமான விரும்பத்தகாத செயல் மட்டுமல்ல, நமது முதலமைச்சர் கூறியதைக்கூட அவர்கள் அலட்சியப்படுத்தி நடந்துகொண்டதற்கு, நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, நாம் கோவை காவல்துறையில் காவிகளின் ஊடுருவல் அதிகம் என்று எழுதியதை நிரூபிப்பதாகவே இது அமைந்துள்ளது; இத்தகையவர்களை அங்கே  சட்டம் – ஒழுங்குத் துறையில் பணியாற்ற அனுமதித்தால், ”அரசு கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது” போன்றதுதான்.

தேவை நடவடிக்கை!

உடனே தக்க நடவடிக்கையை மேற்கொண்டால்தான், மேலும் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கும் அது தக்க பாடமாக இருக்கும்!

கோட்சே பெயரையே சொல்லக் கூடாது என்று வரலாற்றை மறைக்கும் வேலைதான் காவல்துறை அதிகாரிகளின் கடமையா?

மகாவெட்கம்! பெரும் வேதனை!!

தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சரும், உள்துறைச் செயலாளரும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க உடனடியாக முன்வரவேண்டும்.

இன்றேல், கோட்சேயைக் குருநாதர்களாகக் கொண்டு இயங்கும் கூட்டத்தின் கொட்டம் இங்கும் எங்கும் வட்டமடிக்கத் தொடங்கும்.

வரலாற்றைக்கூட சொல்லக் கூடாது என்பதா? 

அக்கூட்டம் மதவெறிக் கண்டன உறுதிமொழி ஏற்புக் கூட்டமல்லவா?

நாட்டின் அமைதியை வளர்க்கக் கூட்டப்பட்டக் கூட்டம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமலா நடந்துகொள்வது! வேதனையாக உள்ளது!!

ஹிந்து மஹாசபைக் கூட்டத்தினர் கோட்சே – ஆப்தே ஆகியோர் பெயரில் ‘பாரத ரத்னா’ பட்டம் வழங்குவோம் என பகிரங்கமாக விழா கொண்டாடி, நாட்டின் தந்தையென உலகோரால் மதிக்கப்பட்டவருமான அண்ணல் காந்தியாரைக் கேவலப்படுத்தி, ‘அகண்ட பாரதம்’என்ற பன்னாட்டு ரீதியில் பிரச்சினையை உண்டாக்கக் கூடிய விஷமப் பிரச்சாரத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 5.2.2022 சனிக்கிழமையன்று தமிழ்நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுகிறோம்; ஒத்த கருத்துள்ளவர்கள் இணைவதையும் வரவேற்கிறோம். 

இந்த குவாலியர் இந்து மதவெறி நோய் பரவாமல் தடுக்கப்படவேண்டும். சீரழிவு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆயத்தமாவோம் என்பதற்கான அறிகுறியே இந்த ஒரு நாள் கண்டன ஆர்ப்பாட்டம்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…